சென்னை: தமிழக சட்மன்ற பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இன்று மீண்டும் பேரவை உரிமைக் குழு கூட்டம் கூடியுள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல். ஏக்கள் கடந்த 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு எடுத்து சென்றனர். இந்த நடவடிக்கை அவை உரிமையை மீறிய செயல் என, அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, உரிமை மீறல் நோட்டீசில் பிழை இருப்பதாக கூறி, அதை செய்வதாக அறிவித்த உயர்நீதி மன்றம், மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று கூறியது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் உரிமைக்குழு இன்று கூடியுள்ளது. பொள்ளாட்சி ஜெயராமன் தலைமையில் பேரவை உரிமை மீறல் குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் ஆஸ்டின் ,ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு குறித்து, இன்று மாலை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.