சென்னை:  2025ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை அமர்வு  ஜனவரி 6-ம் தேதி கவர்னர் உரையுடன் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு  தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் வெறும் இரண்டுநாட்கள் மட்டுமே நடைபெற்றது. இதற்கு பல உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்திருந் தனர். இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, 2025ம் ஆண்டின் முதல் சட்டமன்ற அமர்வு ஜனவரி 6ந்தேதி தொடங்கும் என கூறினார்.

 “2025-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஜன. 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழுதான் முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தால், விவாதம் செய்து நிறைவேற்ற, சட்டசபை தயாராக உள்ளது. கடந்த முறை, தன் உரையின் முதல் மற்றும் கடைசி பக்கத்தை கவர்னர் வாசித்தார். இந்த முறை முழு உரை வாசிப்பார் என நம்புகிறோம். சட்டசபைக்கு வரும் கவர்னருக்கு உரிய மரியாதை வழங்கப்படும்.

சட்டசபையில், உரை நிகழ்த்த மட்டுமே கவர்னருக்கு அனுமதி உள்ளது; கருத்து கூற அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 234 எம்.எல்.ஏ.,க் களுக்கு மட்டுமே கருத்து கூற அனுமதி உண்டு. பார்லிமென்டில் அமைச்சரவை கூடி எழுதி கொடுக்கும் உரையை, ஜனாதிபதி முழுமையாக வாசிக்கிறார்.

அதன்படி சட்டசபையில், முதல்வர், அமைச்சரவை எழுதி கொடுக்கும் உரையை, கவர்னர் வாசிக்க வேண்டும். அதை வாசிக்கும் உரிமை மட்டும் அவருக்கு உண்டு; சொந்த கருத்தை கூற, அவருக்கு உரிமை இல்லை.

கடந்த 2011 முதல் 2021 வரை, ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால கூட்டத்தொடர், இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் காரணமாக, கூட்டம் குறைவான நாட்கள் நடத்தப்பட்டன.

வெள்ளம் போன்ற பாதிப்புகள் வரும்போது, அமைச்சர்கள் களத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால், சட்டசபை கூட்டத்தை அதிக நாட்கள் நடத்த இயலவில்லை. சூழலுக்கு தகுந்தபடி சட்டசபை கூட்டம் நடத்தப்படும். ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்த வேண்டும் என்பது எண்ணம்.

மதுரை, டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேச, தேவையான நேரம் கொடுத்தோம். அரசு எதிர்க்கட்சியை மதிக்கிறது; பேச அனுமதி அளிக்கிறது. சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேறுபாடு பார்ப்பதில்லை.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 2025-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்த உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 16-ஆவது சட்டப் பேரவையின் ஆறாவது கூட்டத் தொடா் 2024ம் ஆண்டு பிப். 12-ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றி கூட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், அது அவர் சில சொற்களை வாசிப்பதை தவிர்த்ததால்,அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆளுநர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.  அதன்பிறகு, கடந்த பிப். 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அரசின் பொது மற்றும் வேளாண்மைத் துறை நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு பேரவை கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு, துறை வாரியான செலவுகளுக்கு ஒப்புதலைப் பெறுவதற்காக சட்டப் பேரவை மீண்டும் கூடியது. கடந்த ஜூன் மாதம் தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்கள் இடைவெளியில் மீண்டும் கடந்த 9-ஆம் தேதி கூடி இரண்டு நாள்கள் அவை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.