சென்னை:
சென்னைக்கு அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும், இதற்காக நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம், 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.  மேலும் ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம், 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் தலா மூன்று கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் 10 கோடி ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் எனவும், பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்கப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.