சென்னை: காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு அரசு மெத்தனம் காட்டி வருகிறது. இதனால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வரான டி.கே.சிவகுமார், கர்நாடகா மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது போக, மீதம் இருந்தால்  தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என தெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு குருவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் இல்லை. இதனால், கர்நாடக மாநில அரசு, தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை திறந்து விடும்படி, தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அதை கர்நாடகா காங்கிரஸ் அரசு மறுத்து வருகிறது.    தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய அளவை விட குறைவான நீரையே கொடுத்துள்ளதாக  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அமைச்சர் மத்திய  நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது ஜூன் – ஜூலை மாதத்திற்கான தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட அம்மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள கர்நாடக துணைமுதல்வரும்,  அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், எப்போதும்போல, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடமாட்டோம் என்று கொக்கரித்துடன், கர்நாடகா மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தது போக,  மீதி தண்ணீர் இருந்தால், அதை  தமிழகத்திற்கு திறந்து விடுவோம் என்று எகத்தாளமாக தெரிவித்து உள்ளார்.  மேலும், நீதிமன்ற தீர்ப்புக்கு எப்போதும் கர்நாடக அரசு கட்டுப்படும். மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் போது இரு மாநிலங்களுக்கும் தேவையான தண்ணீர் நிச்சயம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கர்நாடகா சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக அரசிடம் காவிரி பிரச்சினை குறித்து பேசுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அதுகுறித்து பேசாமல், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் மட்டும் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பியது மட்டுமல்லாமல், தற்போது காவிரி பிரச்சினை முக்கியமில்லை, நாட்டு பிரச்சினைதான் முக்கியம் என தெனாவெட்டாக கூறியிருப்பது,  டெல்லா விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி பிரச்சினையில், தமிழ்நாடு அரசின் கையாகாதனத்தால்தான் கர்நாடக  காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்து வருகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர வேண்டியது அவர்களின் கடமை, அதை பெற வேண்டியது நமது உரிமை. அப்படி இருக்கும்போது, அவர் பிச்சைப்போடுவது போல மீதி இருந்தால் தருகிறேன் என்று கூறுவது சரியல்ல, இதை தமிழ்நாடு கண்டிக்க வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்து உள்ளார்.

திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடாகாவில் ஆட்சிக்கு வந்ததும், முதல்வேலையாக, தமிழ்நாட்டிற்கு எதிரான. தங்களது  மனநிலையைத்தான் காட்டி உள்ளது, காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், மேகதாது அணை கட்டுவோம் என்றும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கூறியதுடன், கர்நாடகாவில் மழை பற்றாக்குறையால் அணைகள் வற்றி வருகின்றன. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என தமிழ்நாட்டுக்கு எதிரான மனநிலையே செயலாற்றி வருகிறார். இவர்தான் ஏற்கனவே  கடந்த பாஜக ஆட்சியின்போதும், காவிரி மற்றும் மேகதாது பிரச்சினை குறித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, தமிழகத்துக்கு எதிரான மனநிலையில் போராட்டங்களை நடத்தினார் என்பதை யாரும் மறந்து விட முடியாது.  கர்நாடக துணைமுதல்வரின் இதுபோன்ற செயல்களை கண்டிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அதை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திராணியில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர்.