சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது,  மாநில பிரச்னைகளில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு., தற்போது கனத்த இதயத்துடன் உங்கள் முன் நிற்கிறேன் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் விளையாட்டு தடை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர்,  மாநில பிரச்னைகளில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு என கூறியவர்,  தற்போது நான் கனத்த இதயத்துடன் இங்க நிற்கிறேன், மக்களை காப்பதே அரசின் கடமை; இனியொரு உயிர், ஆன்லைன் ரம்மியால் பறிபோகக் கூடாது  என்றவர்,   ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது என கூறினார்.

”இதுவரை 41 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட வேதனையுடன் எனது உரையை தொடங்குகிறேன். சென்னையை சேர்ந்த சுரேஷ் என்பவர் 17 லட்ச ரூபாயை இழந்து அதனை கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்னை போன்று பலர் குடும்பத்தை அநாதையாக விட்டு செல்ல கூடாது , எனது தற்கொலையே கடைசியாக இருக்க வேண்டும் என வினோத் என்பவர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்து பரிந்துரைகளை பெற்றோம். ஆன்லைன் ரம்மி தடை குறித்து பொதுமக்களிடமும், ஆசிரியர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து 10,735 மின்னஞ்சல் பெறப்பட்டன. அவை இணையதள சூதாட்டத்தை தடை செய்ய ஆதரவான கருத்துகளாக இருந்தன. வெறுமனே 25 மின்னஞ்சல்கள் மட்டுமே ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவாக வந்தன.

ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச்சட்டம் நிறைவேற்றப்பட்டு., அரசிதழிலும் வெளியிடப்பட்டன. அடுத்ததாக நிரந்தர தடை செய்யும் சட்டம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் கோரிய விளக்கங்களுக்கு பதிலும் அளிக்கப்பட்டது. அமைச்சரும் நேரடியாக சென்று விளக்கமளித்தார்.

ஆனால் 131 நாட்களுக்கு பிறகு அந்த சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதயமுள்ளவர்கள் யாருக்கும் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. சட்ட ஒழுங்கை பேணுவதும், மக்களை பாதுகாப்பதும், மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை. மாநில எல்லைக்குள் மக்கள் அனைவரையும் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.

நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு, சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் அளித்துள்ளார். மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது. இனி ஒரு உயிர் கூட பறிக்கப்படக் கூடாது. இந்த அநியாயம் தொடரக்கூடாது.

அனைத்து உறுப்பினர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

நீதியரசர் சந்துரு குழு அளித்த பரிந்துரை அடிப்படையிலேயே மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த உள்ளது குறிப்பிடத்தக்கது.