சென்னை; கிருஷ்ணகிரி காதல் திருமணம் செய்தவர் கொல்லப்பட்டதில் அதிமுகவினருக்கு தொடர்பு என  சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதிலளித்தார். இதனால் அமளி ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியில் கிட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் நடு ரோட்டில் கழுத்தறுத்து ஆணவ கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனின் மாமனார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜெகன் என்ற இளைஞர் சரண்யா என்ற இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் கே.ஆர்.பி அணை அருகே ஜெகன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது  அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவரை வழிமறித்து வெட்டி ஆணவ படுகொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜெகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆணவப் படுகொலையில் தொடர்புடைய அந்தப் பெண்ணின் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டப் பகலில் நடு ரோட்டில் ஒரு இளைஞர் கழுத்து அறுத்து ஆணவக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெகனின் மாமனாரான சங்கர் கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அப்போது சங்கர், எனது மகளுக்கு வசதியாக இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்து விட்டேன். திடீரென காதலிப்பதாக கூறி எனது மகளை அவர் திருமணம் செய்து கொண்டார். அதன் காரணமாக கோபத்தில் ஜெகனை நான் கொலை செய்தேன் என நீதிபதி முன்பு வாக்குமூலம் கொடுத்திருந்தார். காதல் திருமணம் செய்து கொண்ட காரணத்தினால் இளைஞர் ஒருவரை பட்டப் பகலில் துடிதுடிக்க ஆணவ படுகொலை செய்தது அப்பகுதியில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் இன்று சட்டப்பேரவையில் எதிரொலித்தது. கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது,  பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை நடந்துள்ளது; இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  கிருஷ்ணகிரியில்  காதல் திருமணம் செய்தவர் கொல்லப்பட்டது குறித்து  கூறும்போது,  அதிமுக கிளை செயலாளர் உள்ளிட்ட 3 பேர் தாக்கியதில் இளைஞர் ஜெகன் உயிரிழந்தார்  என கூறியதுடன்,  இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் , சமூக நீதி காக்கும் மண்ணான தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிள்ளார்.

ஆணவக்கொலையில் அதிமுக கிளைச்செயலாளருக்கு தொடர்பு என முதல்வர் கூறியதால் அவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.