அதிமுக பிரமுகரான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தரப்பு ஆக்கிரமித்திருந்த அரசுக்கு சொந்தமான ரூ1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது.

சென்னையின் மையப்பகுதியான அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலையில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான இடத்தை தோட்டக்கலை சங்கம் என்ற பெயரில் சிலர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர்.

இதில் அதிமுக பிரமுகரான கிருஷ்ணமூர்த்தி தோட்டக்கலை நிலத்தை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து 1989 ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தோட்டாக்கலைத் துறை சார்பில் இந்த நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக 2006 ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தற்போது செம்மொழிப் பூங்கா அமைந்திருக்கும் நிலம் மீட்கப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டது.

இருந்தபோதும் செம்மொழி பூங்கா எதிரில் உள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடம் மீட்கப்படாமல் இருந்தது.

1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 115 கிரவுண்ட் நிலத்தின் மீதான நீண்ட சட்ட போராட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை அந்த இடத்திற்கு சீல் வைக்கப்பட்டு அரசு வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த நிலத்தை மீட்க சட்ட நடவடிக்கை மேற்கொண்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.