சென்னை: நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் போட்டிப்போட்டு மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.  அரசு ஊழியர்களை மயக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வுகளை வழங்கி, அதை உடனே அரியர்சுடன் வழங்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் ஹேப்பியாக உள்ளனர். அதுபோல தமிழகஅரசு சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு, தமிழ் கட்டாயம் என்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டு, சிறுபான்மையின மாணவர்களுக்கு கட்டாய தமிழிலில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இதுமட்டுமின்றி, தமிழகஅரசு பணிகளில் தமிழர்களுக்கே என்பதற்கு பதிலாக அண்டை மாநில மொழிகளையும் சேர்த்துள்ளதுடன், அயல்நாட்டு மொழியான அரபியையும் இணைத்து உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில், தற்போது, நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை செயல்படுத்தும் விதமாக தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “தாய்நாட்டிற்காக நம் நாட்டின் எல்லைகளில், பல்வேறு கடினமான குழல்களில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்திடும் நோக்குடன் தன்னலமற்ற சேவைகள் செய்துவரும் நமது முன்னாள் படைவீரர்களின் நலனிற்காக இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  வீட்டுவரித் தொகையினை மீளப்பெறும் சலுகை, தற்போது கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற படைவீரர் போன்ற சில பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வரும் நிதியாண்டிலிருந்து குடியிருப்புகள், சொத்துவரி, வீட்டுவரித் தொகையினை மீளப்பெறும் இத்திட்டத்தினை அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் நீட்டிப்பு செய்து வழங்கிட ஆவன செய்யப்படும். இதனால் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் முன்னாள் படைவீரர்கள் பயன் பெறுவர்” என  தெரிவித்துள்ளது.