சென்னை: குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு மாதம் ரூ.7500 உதவித்தொகையுடன் இலவச பயிற்சியும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட  நான் முதல்வன் என்ற தொலைநோக்கு திட்டத்தின் வாயிலாக உதவிக்கரம் நீட்டப்பட்டு வருகிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கும்,  மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்மூலம்,  மத்திய அரசின் ஆள்சேர்ப்பு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க தமிழக இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முதன்மை மையமாக நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட குடிமைப்பணிகள் மற்றும்  மத்தியஅரசின் உயர் பணிகளில் தமிழ்நாடு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த மே மாதம் வெளியான அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முடிவுகளில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இடம்பெறவில்லை. மேலும் 933 மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ் பணிகளுக்குத் தேர்வாகியிருக்கும் நிலையில், இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 பேர் மட்டுமே தேர்வாகினர். கடந்த ஆண்டை பொறுத்தவரை தேர்வான 685 பேரில் 27 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவ்வாறு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிபெறும் தமிழ்நாடு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதை கருத்தில்கொண்டு அதனை அதிகரிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் பத்து மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு மேம்பட்டப் பயிற்சி, பயிற்சி பொருட்கள் வ. ழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்“ என்று அறிவித்தார்

இதேபோல், ” மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் முதல்நிலை தேர்விற்குத் தயாராகுவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் . முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்” என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து தற்போது, ஊக்கத்தொகைக்கு நபர்கள் தேர்வு செய்யப்படும் நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,   ” தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வின் ஊக்கத் தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வை 10.09.2023 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. இத்தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு மாதம் 7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு தேர்வுக்கான ஊக்கத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://nmcep.tndge.org/apply_now என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு வழங்கும் இந்த மாதாந்திர உதவித் தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும் 1000 விண்ணப்பதாரர்களில் 50 மாணவர்கள் புதியவர்களாக (முதல்முறையாக யுபிஎஸ்சி தேர்வுக்கு முயற்சிப்பவர்கள்) இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதியவர்களுக்கான வயதுத் தகுதி என்பது குறைந்தபட்சம் 21 ஆண்டுகளாகவும் அதிகபட்சம் 22 ஆண்டுகளாகவும் இருக்க வேண்டும். மருத்துவம், ஒங்கிணைந்த பட்டப் படிப்பு, கால்நடை மருத்துவம் போன்றவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயதில் தளர்வு வழங்கப்படும்.

பொதுவானவர்கள் (950 இடங்கள்) குறைந்தபட்ச வயது : 21

அதிகபட்ச வயது: ஆதி திராவிடர்/ பழங்குடியினர்/ அருந்ததியர் ஆகியோர் 37 வயதுக்கும், மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் 35 வயதுக்கும், பொதுப்பிரிவினர் 32 வயதுக்கும் மிகாதவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் உள்ளன என்றும் விண்ணப்ப படிவத்தில் தேர்வு மையத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
ஏற்கனவே மத்திய மாநில அரசுப் பணிகளில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் இந்த மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.