சென்னை: தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் டிரெக்கிங் எனப்படும்  மலையேற்ற பயணத்துக்கு ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதித்து  வனத்துறை அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது. அதன்படி, பாதுகாப்பு கருதி 3 மாதங்கள் மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்படடு உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு சார்பில் மலையேற்றத்துக்கு 40 இடங்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் இணைய தளத்தில் அனுமதி பெற்று, பயிற்சி பெற்ற அரசு அலுவலர் ஒருவர் உதவியுடன் மலையேறலாம் தமிழ்நாடு அரசு அறிவித்து இந்த திட்டத்தை கடந்த 2024ம் ஆண்டு  அக்டோபர் 24ந்தேதி துணைமுதல்வர் உதயநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி,   தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து ‘டிரெக்கிங்’ எனப்படும் மலையேற்றம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோடை காலத்தை முன்னிட்டு, . வெயிலின் தாக்கத்தால்,  காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என்பதால், இந்த மலையேற்ற நடைபயணத்துக்கு தடை விதித்து வனத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி, டிரெக்கிங் செல்ல  வருகிற ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்த காலக்கட்டத்தில் வெப்பநிலை உயர்வு, வறண்ட சுற்றுச்சூழல் மற்றும் காட்டு தீ நிகழ்வுகள் அதிகரிப்பால் நடைபயணிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அபாயம் ஏற்படாமல் தடுக்கப்படும் என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட துயரமான குரங்கணி காட்டுத் தீ விபத்தில் 23 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து,  டிரெக்கிங் முழுமையாக தடை செய்யப்பட்ட நிலையில், பின்னர் 2018ம் ஆண்டு  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விரிவான தமிழ்நாடு வனங்கள் மற்றும் வனவிலங்கு பகுதிகள் (மலையேற்ற ஒழுங்குமுறை) விதிகளை அறிவித்தது.

அதன்படி,  மலையேற்றம் செல்ல, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மேலும், கோடை வெயில், அதன் காரணமாக மலையில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற அபாயகரங்களால்,  பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 வரை மூன்று மாதங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  புதிய விதிகள்படி,   10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் “எளிதான, மிதமான மற்றும் கடினமான” அனைத்து பாதைகளிலும் மலையேற்றத்தை தடை செய்கின்றன, அவை நிலப்பரப்பு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் போன்ற பல காரணிகளின் அடிப்படையில் கவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட நேர்கோட்டுப் பாதையில் மட்டுமே மலையேற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும், மலையேற்றக்காரர் காட்டில் சுற்றித் திரியக்கூடாது. அனுமதிக்கப்பட்ட பாதையில் மலையேற்றம் செய்யும்போது, ​​அனுமதிக்கப்பட்ட நேர்கோட்டுப் மலையேற்றத்திலிருந்து எந்தத் திசைதிருப்பலும் அல்லது கவனச்சிதறலும் அனுமதிக்கப்படாது.

ஒரு மலையேற்றக் குழுவின் குறைந்தபட்ச அளவு ஐந்து பேர் மற்றும் அதிகபட்சம் 15 பேர் என்று அரசாணை கூறுகிறது.

வனத்துறையில் பதிவு செய்யாவிட்டால், எந்தவொரு நிறுவனமோ அல்லது அமைப்போ அல்லது கிளப்போ மலையேற்றத்தை எளிதாக்கவோ அல்லது ஏற்பாடு செய்யவோ அனுமதிக்கப்படாது. மலையேற்றக் குழு “குழு தங்கள் சொந்த ஆபத்தில் பங்கேற்கிறது, மேலும் மலையேற்றத்தின் போது காயம் அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு விபத்திற்கும் தமிழ்நாடு அரசு வனத்துறையை பொறுப்பேற்கக் கூடாது” என்று அறிவிக்கும் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.