சென்னை:  நிரந்தர திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைபடியினை 4 விழுக்காடு உயர்த்தி 38 விழுக்காடாக வழங்கிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அகவிலைப்படி உயர்வினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரே வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் மற்றும் இதர படிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,00,000 மற்றும் அதற்கு மேல் உதவித் தொகை நிர்ணய வருமானம் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியினை 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கிட அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது தமிழ்நாடு மாநில அரசு பணியாளர்களுக்கு 01.01.2023 முதல் அகவிலைப்படி 4 விழுக்காடு உயர்வு செய்யப்பட்டு 38 விழுக்காடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு அரசாணைகளின்படி ரூ.1,00,000 மற்றும் அதற்கு மேல் உதவித்தொகை நிர்ணய வருமானம் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர திருக்கோயில் பணியாளர்களுக்கு 01.01.2023 முதல் அகவிலைபடியினை 34 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடு உயர்வு செய்து 38 விழுக்காடாக வழங்கிட கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.

* இந்த அகவிலைப்படி உத்தரவானது பகுதி நேர பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பணியிடப்பட்டியலில் இடம் பெறாதாவர்களுக்கு பொருந்தாது.

* அந்தந்த திருக்கோயில் நிதிநிலைமை மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பளச் செலவின உச்சவரம்பிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

* அனைத்து சார்நிலை அலுவலர்கள் தத்தம் அதிகார வரம்புக்குட்பட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இந்த உத்தரவு முறையாக அமலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.