சென்னை:
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று திடீரென்று டில்லி புறப்பட்டுச் சென்றார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இன்றும் (செவ்வாய்க்கிழமை) பல்வேறு தரப்பினரும் போராட்டம் அறிவித்து உள்ளனர். ஆளும் கட்சியான அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடையடைப்பு போராட்டத்தையும், வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தையும் நடத்த இருக்கிறார்கள்.
காவிரி படுகை மாவட்ட விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளனர்.
5-ந் தேதி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் மற்றும் ரெயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. 6-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டமும், திருச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற உள்ளது. 11-ந் தேதி பா.ம.க. மற்றும் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த மாட்டோம் என்று கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை அடித்து உடைத்தனர்.
நேற்று காலை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு மே பதினேழு இயக்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்குள்ள இந்தி பெயர் பலகையை உடைக்க முயற்சி நடந்தது.
இந்த நிலையில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 11-ந் தேதி ராணுவ கண்காட்சி நடைபெற இருக்கிறது. 65 நாடுகள் பங்கேற்கும் இந்த கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்து இருக்கின்றன.
இதனால் தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மத்திய உள்துறை இலாகாவுக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகம் போராட்டக் களமாக மாறி இருப்பதை தொடர்ந்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமையை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ் நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைத்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து ஆலோசித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை ஒன்றை அனுப்பிவைத்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காஞ்சீபுரத்தில் உள்ள சங்கர மடத்துக்கு சென்றார். அங்கு தியானம் மேற்கொண்ட அவர், விஜயேந்திரரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து மதியம் 1.30 மணிக்கு அவசர அவசரமாக சென்னை திரும்பினார்.
இந்த சூழ்நிலையில், டில்லி வருமாறு அவருக்கு உள்துறை இலாகா அவசர அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் பரவியது.
இதைத்தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை 6.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்குவார் என்று கூறப்படுகிறது.
அதன்பிறகு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
ஆளுநரின் இந்த டில்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.