சென்னை:

ராஜீவ் வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உச்சநீதிமன்றம் அவர்கள் விடுதலை குறித்த முடிவு எடுக்கலாம் என்று கூறியும், அதற்கான கோப்பை கிடப்பில் போட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபட்பாயஸ், ஜெயக்குமார் உள்பட 7 பேர், ஆயுள் கைதிகளாக உள்ளனர். அவர்கள் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருவதால், அவர்களை  முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறி இருந்தது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக கவர்னருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக கவர்னர் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக இதுவரை எந்த தகவலையும் தமிழக கவர்னர் தரப்பில் இருந்து வெளியிடப்படாமல் உள்ளது.  இது தொடர்பாக தமிழக அமைச்சரவை மற்றும் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், அந்த கோப்புகளில் கையெழுத்து போடாமல் கவர்னர் பன்வாரிலால் இழுத்தடித்து வருகிறது.

ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள தான் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு நளினி மனு அனுப்பினார். ஆனால் தமிழக அரசு தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து நளினி சென்னை  உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுவில் அவர், “எங்கள் 7 பேரையும் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார். முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய மனுவில் அனைத்து குற்றவாளிகளும் தாங்கள்  25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்திருக்கிறார்கள் என்று கூறியிருந்தனர்.

நளினியின் மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதை ஏற்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவில், “ராஜீவ் கொலையாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக கவர்னரிடம் விளக்கம் கேட்க முடியாது. மேலும் தண்டனை பெற்ற கைதிகள் தங்களை விடுவிக்குமாறு உரிமையாக கோர முடியாது” என்று தெரிவித்திருந்தது.

முன்னதாக இந்த கோரிக்கை குறித்து, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணிடமிருந்தும் அரசாங்கம் கருத்து பெற்றது. அதில், ஆளுநருக்கு 161 வது பிரிவின் கீழ் (மன்னிப்பு வழங்குவதற்கும், சில சந்தர்ப்பங்களில் தண்டனைகளை இடைநிறுத்தவோ, அனுப்பவோ அல்லது மாற்றவோ) அதிகாரம் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, நீதிபதிகள்,  ஆர்.சுப்பையா மற்றும் சி.சரவணன் அமர்வு,  7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து கவர்னரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டறிய வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் கூறுகையில், “இந்திய அரசியலமைப்பு சட்டம் 361-படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மேல் நடவடிக்கை குறித்து கவர்னரிடம் விளக்கம் கேட்க முடியாது” என தெரிவித்தார்.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,  நளினியின் கோரிக்கையை ஏற்க முடியாது. நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அமைச்சரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை நளினி உரிமையாக கோர முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

ஆனால், ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில்தான் 7 பேர் விடுதலை தொடர்பாக, வெளிமாநில சட்ட நிபுணர்களுடன் கவர்னர் புரோகித் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அதே வேளையில் குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர், ராஜீவ் கொலையின்போது பாதிக்கப்பட்ட காவல் துறையினர், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நிலை இப்படி உள்ள நிலையில்தான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் ஏழு ஆயுள் குற்றவாளிகளை விடுவிக்க அமைச்சரவை பரிந்துரைத்ததற்கு உடன்படவில்லை என்று தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முறைசாரா முறையில் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

இப்போதைக்கு,புரோஹித் தனது முடிவைப் பற்றி அரசாங்கத்திற்கு எழுத்துப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து வரும் குறிப்பு என்னவென்றால், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்காக செப்டம்பர் 2018 இல் செய்யப்பட்ட அமைச்சரவை பரிந்துரையுடன் அவர் செல்ல விரும்பவில்லை என்பது பல ஆதாரங்களின்படி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

குற்றவாளிகளை விடுவிப்பதற்காக தமிழக அரசு கடந்த  பிப்ரவரி 2014 மற்றும் மார்ச் 2016ம் ஆண்டு இயற்றிய தீர்மானத்துக்கு  பதிலளிக்கும் வகையில்,  மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் ஏப்ரல் 2018 இல் வெளியிடப்பட்ட ஜனாதிபதி உத்தரவில், தமிழகஅரசின்  இந்த நடவடிக்கை “மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கி விடும், இது சர்வதேச ரீதியான மாற்றங்களுக்கு வழிவகுக்கும்” என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், 7 பேரின் விடுதலை சாத்தியப்படாத ஒன்று என்று ஆளநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் ஆளுநரின் நிலைப்பாடு ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லை என்று ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

ஆக… ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரும் சிறையில் இருந்து விடுதலையாக ஒருபோதும் வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகி உள்ளது.