சென்னை: விடுமுறை நாட்களையொட்டி ஆகஸ்டு 11 முதல் 15வரை 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக  தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை வருவதால்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.

சென்னை உள்பட நகர்ப்புறங்களில்  கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் நிமித்தமாக வசிப்பவர்கள், விடுமுறை நாட்களில் தங்களது  சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்களின் தேவைக்காக, விடுமுறை தினங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விரைவு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.  தொடர் விடுமுறை மட்டுமல்லாமல் வார இறுதி நாள்களிலும் தற்போது சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசு விரைவுப் போக்குவரத்து பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு சுதந்திர தின விழா செவ்வாய்க் கிழமை (ஆகஸ்டு 15ந்தேதி) வருகிறது.  முன்னதாக சனி, ஞாயிறு வார விடுமுறையை சேர்த்து சில நிறுவனங்களில் ஊழியர்களுக்கு திங்கள் கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நான்கு நாள்கள்  தொடர் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப உள்ளனர்.

இதனால் சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், கோவை போன்ற இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, ஆகஸ்டு 11, 12, 13,15 ஆகிய 4  நாள்களில் மொத்தம் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், மக்கள் கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க முன்பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.