சென்னை:
தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றி வரும் அரசு மதுபான கடைகளை நிர்வகித்து வரும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை தொடர்பான மானியக் கோரிக்கையின் போது பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தார்.
அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர் களுக்கு மாத தொகுப்பு ஊதியமாக ரூ.2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இந்த ஊதிய உயர்வானது ஏப்ரல் 2019 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டாஸ்மாக் நிறுவனத்தின் 7547 உதவி விற்பனையாளர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ 62.53 கோடி கூடுதலாக செலவாகும், அதற்கான நிதி ஒதுக்கப்படும் என்றார். இதன் மூலம் 36,056 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.