சென்னை: மோட்டார் வாகனங்களுக்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட வரி குறித்தான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கு வரியை உயர்த்தி உள்ளது.
தமிழகத்தில் வாகனங்களுக்கான சாலை வரி வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலானது. இதனால், இருசக்கர வாகனங்கள், கார்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இருசக்கரம், 4 சக்கரம் வாகனங்களின் விலை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயர்கிறது.
சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படை யில் வரி உயா்த்தப்படுகிறது.
புதிய பைக்குகளுக்கான வாழ்நாள் வரி (Life Tax), ரூ.1 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், பழைய பைக்குகளுக்கு, ஒருவருட பழையதெனில் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 சதவீதமும், அதற்கு மேல் 10.25 சதவீதமும், 2 ஆண்டு வரை பழைமையானதாக இருந்தால் ரூ.1 லட்சத்துக்கு 8 சதவீதம், அதற்கு மேல் 10 சதவீதம் என வரி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, 15 ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டாா் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங் களுக்கு ரூ.3 ஆயிரம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதன்மூல் நாள் ஒன்றுக்கு, இருசக்கர வாகனம், கார் உட்பட 8,000 புதிய வாகனங்கள் புதியதாக பதிவு செய்யப்படுகின்றன.
வாகனங்களின் மொத்த விலையில் கணக்கீடு செய்து, சாலை வரி விதிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு 8 சதவீதம், கார்களின் வகைகளுக்கு ஏற்றார்போல் 10 – 15 சதவீதம் வரை சாலை வரி வசூலிக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு சாலை வரியில் மாற்றம் செய்யப்படவில்லை. சாலை வரியை உயர்த்த தமிழக போக்குவரத்து ஆணையரகம், சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், புதிய சாலை வரி உயர்வு நள்ளிரவு முதல் அமலாகி உள்ளது.