சென்னை: அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதி உணவுக்கட்டணத்தை மேலும் ரூ.400  உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பிற்படுத்தப் பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர். சீர் மரபினர், மற்றும் சிறுபான்மையினருக்கான விடுதிகள் செயல்படுகின்றன. அங்கு தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கான மாத கட்டணத்தை உயர்த்துவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுவும் இதுவரை வசூலித்து வந்த தொகையியுடன் மேலும்  400 ரூபாய் கூடுதலாக இனி வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக   தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரின் கருத்துக்களை அரசு ஆய்வு செய்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல பள்ளி விடுதி மாணவ, மாணவியர்களின் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி நபர் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ.1,100-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் உயர்த்தப்பட்டு உள்ள விடுதி உணவுக்கட்டணம் அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது. விடுதி உணவுக் கட்டணம் உயர்த்தி வழங்குவதால் கடந்த ஆண்டு அக். முதல் இந்தாண்டு மார்ச் வரையில் ஏற்படும் கூடுதல் தொகையான ரூ.9 கோடியே 56 லட்சத்து 17 ஆயிரத்து 200 ஐ வழங்கவும் அரசு ஆணையிட்டு உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல், மின்கட்டணம், வீட்டு வரி, தொழில்வரி, பதிவுத்துறை கட்டணம், பேருந்த கட்டணம் என அனைத்து வகையான கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வரும் நிலையில், தற்போது விடுதிகளில் தங்கி படித்து வந்த ஏழை மாணவர்களின் உணவு கட்டணத்தை உயர்த்தி உள்ளது, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.