சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு  அரசு நிர்ணயித்த கல்வி கட்டணமே வசூலிக்க வேண்டும் என்று  தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 91,927 மருத்துவ இடங்கள் உள்ளன. இவை நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 276 தனியார் மருத்துவக்  கல்லூரிகளில் 41 ஆயிரம் மீதம் அரசு கல்லூரிகளிலும் உள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களிலும் ஏறக்குறைய பாதி அரசு கல்லூரிகளில் தான் உள்ளது. இவற்றுக்கான கட்டணம் மத்திய அரசால் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

தனியார் மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டண கொள்ளையை தடுக்க மத்தியஅரசு  கடந்த பிப்ரவரி (2022) மாதம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.  தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படி,  நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 91 ஆயிரம் MBBS இடங்களில், நான்கில் மூன்று பங்கு இடங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட தனியார் மருத்துவக் கல்லூரிகள், தங்கள் நிறுவனங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மொத்த இடங்களில் 50 சதவீதம் இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்.

மத்தியஅரசின் புதிய வழிகாட்டுதல்படி, அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் தவிர, தனியார் கல்லூரிகளில் உள்ள பாதி இடங்கள் (அல்லது சுமார் 20,000 இடங்கள்) அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த கல்விக் கட்டணத்தில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டும்.  அரசு கட்டணத்திற்கான இடங்கள் போக மீதமுள்ள 50% இடங்களுக்கு கல்லூரிகள் தன்னிச்சையான கட்டணத்தை வசூலிக்க முடியாது. இந்த இடங்களுக்கான கட்டணத்தை மாநில ஒழுங்குமுறை கட்டணக் குழு நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழகஅரசு, தனி சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 50% இடங்களுக்கு அரசுக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநில சுகாதாரத் துறை செயலாளர் பி செந்தில் குமார் தனி சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கல்வி கட்டணம் தொடர்பாக பிப்ரவரியில் தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதல்கள்படி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தவர், இதுதொடர்பாக தனியார் கல்லூரிகள் நீதிமன்றங்களை நாடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும், ஆனால், நாங்கள், இதுதொடர்பாக  கட்டண நிர்ணயக் குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

அதாவது, தனியார் மருத்துவக்கல்லூரிகளில், கல்விக் கட்டணம் ₹4,000 உட்பட, ஆண்டுக்கு ₹25 லட்சத்துக்குப் பதிலாக ₹13,610 வசூலிக்க வேண்டும். மீதமுள்ள இடங்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயக்குழு நிர்ணயிக்கும். ஆனால், இதற்கு தனியார் கல்லூரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் 70 மருத்துவக் கல்லூரிகளில் 10,725 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன – 38 அரசு, 19 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 13 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள். மாநிலத்தில் அதிக அரசு கல்லூரிகள் உள்ளன.  தற்போது வரை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கைகள், சுகாதாரப் பணிகளுக்கான பொது இயக்குநரகத் தால் தகுதி அடிப்படையிலான ஒதுக்கீடுகளாக இருந்தன. ஆனால் இந்த நிறுவனங்கள் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளைப் போல் கட்டண நிர்ணயக் குழுவின் கீழ் வராது.

சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கை மாநிலத் தேர்வுக் குழுவால் மேற்கொள்ளப்படுகிறது. அரசு, நிர்வாகம் மற்றும் என்ஆர்ஐ ஒதுக்கீடு மற்றும் காலாவதியான என்ஆர்ஐ இடங்களின் கீழ் சேரும் மாணவர்களுக்கு கட்டண நிர்ணயக் குழு கட்டணம் நிர்ணயம் செய்கிறது.

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்பட்டால், நீட் தேர்வுக்கு முன்மொழியப் பட்ட தகுதியை இது பிரதிபலிக்கும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் நம்புகின்றனர். “அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் அரசு கட்டணத்தில் இடங்களைப் பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகள் நிர்வாகம், கல்லூரிகளின்  “உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள், வசதிகள் போன்றவற்றால், அதிக கட்டணம் வசூலிக்கப்பட வேண்டியது இருப்பதாகவும்,  மருத்துவமனைகளுக்கு கல்விக் கட்டணம் முக்கியமான வருமான ஆதாரங்களில் ஒன்றாகும். அவர்கள் கட்டணத்தைக் குறைத்தால், அது தரத்தைப் பாதிக்கும்” என்று குற்றம் சாட்டி உள்ளனர். இதுதொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் தமிழகஅரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி பல்கலைக்கழங்கள்  50% இடங்களுக்கு  அரசு நிர்ணயித்த கல்வி கட்டணமே வசூலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய வழிகாட்டுதலின்படி, மருத்துவக் கல்லூரிகளால் எந்தக் கட்டணமும் வசூலிக்க முடியாது. லாப நோக்கற்ற அடிப்படையில் மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

மருத்துவக் கல்லூரியின் செயல்பாட்டுச் செலவே கட்டணக் கட்டமைப்பிற்கு அடிப்படையாக அமையும். எனவே, இயக்கச் செலவு முந்தைய நிதியாண்டின் தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்படும். (குறிப்பு: கொரோனா காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளும் கணக்கில் கொள்ளப்படும்). அதேபோல், தணிக்கை அறிக்கை இல்லாத புதிய கல்லூரிக்கு, மாநிலத்தில் அண்மையில் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரியின் தணிக்கையின் அடிப்படை யில் தற்காலிக கட்டணக் கட்டமைப்பு கணக்கிடப்படும்.

கல்லூரியில் சேரும் மாணவருக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், படிப்பு முடியும் வரை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முந்தைய செலவுகள் மற்றும் தற்போதைய வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்து மருத்துவக் கல்லூரிகள் 6 முதல் 15% வரையிலான மேம்பாட்டுக் கட்டணத்தை இயக்கச் செலவில் வசூலிக்க அனுமதிக்கப்படும்.

மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய மருத்துவமனையை நடத்துவதற்கான எந்தச் செலவையும் மாணவர் கட்டணத் தில் சேர்க்க முடியாது. ஒருவேளை, மருத்துவமனை அதிக நஷ்டத்தில் இயங்கும் பட்சத்தில், மாநிலக் கட்டண ஒழுங்குமுறைக் குழு, கல்லூரியின் ஒரு பகுதியை ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு மாணவர்களிடமிருந்து வசூலிக்க அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது.