சென்னை: கொல்லி மலையில் ‘இரவு வான் பூங்கா’ அமைக்க  முதல்கட்ட நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில் இரவு வானத்தின் உள்ளார்ந்த வனப்பை இயற்கை கலாச்சார மற்றும் வரலாற்று வளமாக அங்கீகரிக்கும் வகையில் ரூ.1 கோடி செலவில் ‘இரவு வான் பூங்கா’ அமைக்கப்படும் என  ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில்,  அதனை செயல்படுத்தும் வகையில், இரவு வான் பூங்கா அமைப்பதற்கு ரூ.44 லட்சம் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2024ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தமிக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய  சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அமைச்சர்களான சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர்,.  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இரவு வான் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தனர்.

அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் இரவு வான் பூங்கா (Dark Sky Park) அமைக்கப்படும். ஒளி மாசுபாட்டின் உலகளாவிய அச்சுறுத்தலில் இருந்து விலைமதிப்பற்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்க உதவும். இரவுநேர விலங்குகளுக்கு இணக்கமான ஒரு பூங்காவாக இது இருக்கும். மின்சார விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்து இரவு வானத்தில் நட்சத்திரங்களைப் பார்ப்பதை இது அதிகரிக்கும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  கொல்லிமலையில்,  இரவு வான் பூங்கா அமைப்பதற்கு ரூ.44 லட்சம் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொல்லி மலைகள் தனித்துவமான புவியியல் மற்றும் காலநிலை அம்சங்களைக் கொண்டுள்ளன. இதனால் இங்கு இரவு வன பூங்கா நிறுவுவதன் மூலம் ஒளி மாசுபாடு குறைவதோடு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பாதுகாப்பையும் ஒட்டுமொத்த பல்லுயிரியலையும் உறுதி செய்யும் என்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இரவு வான் பூங்கா உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள், வானியல் புகைப்படக் கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது