சென்னை: தமிழ்நாட்டில், 4ம் வகுப்பு முதல் 9ம் வரையிலான வகுப்புகளுக்கு  இன்றுடன் தேர்வுகள் முடியும் நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தற்போதைய கடும் வெயில், அனல்காற்று மற்றும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்து, நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு, மீண்டும்  ஜூன் 2வது வாரத்தில்  அதாவது ஜூன் 12ந்தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் ஆண்டிறுதி தேர்வுகள் ஏற்கனவே கடந்த மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.  ஏற்கனவே  10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வுகள் முடிந்துள்ளன. அதுபோல 1 முதல் 3ம் வகுப்பு வரையிலும் தேர்வுகள் முடிவடைந்தன. 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் நடைபெற்று வந்தன. ஆனால், இடையில் ரம்ஜான் பண்டிகை  மற்றும் வாக்குப்பதிவு வந்ததால், 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு தேர்வுகளை ஒத்தி வைத்த பள்ளிக்கல்வித்துறை, அந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23ந்தேதிகளில் நடைபெறும் என அறிவித்தது. அதன்படி, தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்றுடன் தேர்வுகள் முடிவுக்கு  வருகிறது. இதையடுத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கோடை விடுமுறை தொடர்பாக பள்ளி கல்வித்துறை இதுவரை முறையான அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றுடன் தேர்வுகள்  முடிவடைவதால், ஏப்ரல் 24ஆம் தேதி (நாளை) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படவுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பொதுவாக ஜுன் முதல்வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் ஆனால்,  மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் கோடை வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால், பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது பள்ளிகளுக்கு மேலும் ஒருவாரம் விடுமுறை விடப்படும் என தெரிகிறது. அதன்படி ஜூன் 12ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.