ராசிபுரம்: தமிழகத்தின் கடன் ரூ. 5.50 லட்சம் கோடியாக இருந்த நிலையில், திமுக ஆட்சியில், அது ரூ. 7 லட்சத்துக்கு 53 ஆயிரம் கோடியாக உயா்ந்துள்ளது என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

மத்தியில் பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பிரபலப்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கவும், திமுக அரசின் ஊழல் குறித்து மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கிலும், பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையின் என் மண், என் மக்கள் (என் மண், என் மக்கள்) யாத்திரை என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த யாத்திரை 234 சட்டசபைகளையும் உள்ளடக்கும் வகையில் 6 மாத காலம் நடைபெறுகிறது. இந்த யாத்திரையானது, ராமேஸ்வரத்தில் புறப்பட்டு சென்னையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. தற்போது தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டத்தை முடித்து நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

ராசிபுரம் தொகுதியில் நேற்று (ஞாயிறு)  நடைபெற்ற  ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட நடைப்பயணம் நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.

யாத்திரையைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கே.அண்ணாமலை பேசும்போது,  திமுக கடந்த தோதலில் 511 வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் இதுவரை வெறும் 20 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது.

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோதலில் பிரதமா் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவைப்பதிலும், திமுகவை வீட்டுக்கு அனுப்புவதிலும் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் தமிழகம் அதிகம் கடன் வாங்கியுள்ள மாநிலமாக உருவாகியுள்ளது.

தமிழகத்தின் கடன் ரூ. 5.50 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ. 7 லட்சத்துக்கு 53 ஆயிரம் கோடியாக உயா்ந்துள்ளது.

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது.

இந்த கடனை நாம் திருப்பிச் செலுத்த 35 ஆண்டுகளாகும்.

அரசுக்கு டாஸ்மாக் மூலம் ரூ. 44 ஆயிரம் கோடி ஆண்டு வருமானம் கிடைக்கிறது.

இந்த வருமானம் ரூ. 50 ஆயிரம் கோடியாக உயரும் என்றாா்.

இக்கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சா் எல்.முருகன்,  இந்த யாத்திரை முதல்வா் மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பும் யாத்திரை. நரேந்திர மோடி அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் யாத்திரை. இது ஊழல் திமுகவிற்கு எதிரானது. வாரிசு அரசியலுக்கு எதிரானது. இந்த யாத்திரை மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

மத்தியில் ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருவதால், உலகத் தலைவா்கள் போற்றும் தலைவராக மோடி திகழ்கிறாா். திமுக ஆட்சியில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என்றாா்.

இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.