சென்னை: தனியார் பள்ளிகளில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில், மத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல  இந்துக்கள், இந்து அமைப்புகள்  நடத்தும்  பள்ளிகளில் இந்து மாத சார்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  தனியார் பள்ளிகளில்  அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்வுகள்   நடத்த தடை விதித்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட விதிகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் செயல்படும் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளும் அனுமதி பெற்று செயல்பட வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு தனியாக சட்டம் இயற்றி தனியார் பள்ளிகளுக்கான சட்டம் மற்றும் விதிகளை ஏற்கனவே வரையறை செய்து உள்ளது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் சாதி, மதம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. இதனை முற்றிலும் தடை செய்வதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட விதிகளில் திருத்தங்களை செய்துள்ளது.

பள்ளி கல்வித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தரமோகன் வெளியிட்டுள்ள உத்தரவில், “தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் மேற்கொண்டு தமிழ்நாடு அரசு அரசாணையாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 2018 (தமிழ்நாடு சட்டம் 35/2019) பிரிவு 57 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாடு ஆளுநர் இதன் மூலம் தமிழ்நாட்டில் பின்வரும் திருத்தங்களைச் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்குரிய கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவொரு பள்ளி வளாகமும், பள்ளி நேரத்திலோ அல்லது அதன் பின்னரோ, எந்தவொரு நிகழ்ச்சி, கூட்டம், பிரச்சாரம், அறிவுறுத்தல் அல்லது எந்தவொரு வெளிப்புற நபர், சங்கம் அல்லது அமைப்பின் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்பாடு செய்ய, நடத்த அல்லது எளிதாக்க பயன்படுத்தப்படக்கூடாது.

(i) அரசியல் அல்லது கருத்தியல்

(ii) வகுப்புவாத அல்லது பிரிவினைவாத, அல்லது

(iii) இல்லையெனில், பள்ளியின் கல்வி நோக்கங்களுடன் தொடர்பில்லாதது, கலாச்சார நிகழ்வுகள், சமூக சேவைத் திட்டங்கள், ரத்த தான முகாம்கள், நினைவு விழாக்கள் அல்லது இது போன்ற செயல்பாடுகள், அவை மதச்சார்பற்றவை, அரசியல் சாராதவை, கல்வி நிறுவனத்தின் நேரடி மேற்பார்வை மற்றும் பொறுப்பின் கீழ் நடத்தப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும் அரசாங்கத்தால் குறிப்பிடப்படும் தகுதி வாய்ந்த அதிகாரி அல்லது வேறு எந்த அதிகாரத்தின் முன் அனுமதி பெற வேண்டும். இந்த துணை விதியின் நோக்கங்களுக்காக, “வகுப்புவாத அல்லது பிளவுபடுத்தும் செயல்பாடு என்பது மதம், இனம், சாதி, சமூகம், மொழி அல்லது சித்தாந்தத்தின் அடிப்படையில் மாணவர்களிடையே ஒற்றுமையின்மை, பகைமை, வெறுப்பு அல்லது வெறுப்பை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட அல்லது சாத்தியமான எந்தவொரு செயலையும் குறிக்கிறது”

என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு சிறுபான்மையினர் நடத்தும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

[youtube-feed feed=1]