மதுரை: மதுரையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட நகர் விரிவாக்கம் தொடர்பான ‘மாஸ்டர் பிளான்’ வரைவு திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் 3 நகராட்சிகள், 4 டவுன் பஞ்சாயத்துகள், 316 ஊராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 147.97 சதுர கிலோ மீட்டராக நகர் எல்லை விரிவடையும் சாத்தியக் கூறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மதுரையும்,  சென்னை, கோவை மாநகரங்களை போல் தொழில் வளமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள், பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் 1971ல் ஏற்படுத்தப்பட்ட மாஸ்டர் பிளான் உருவாக்கம் திட்டம் கொடைக்கானல், ஊட்டி தவிர பிற நகரங்களில் செயல்படுத்தப்படவில்லை.  . அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாததால் நகரில் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மதுரை மாநகராட்சியில் 1994ல் பழைய 72 வார்டுகளுக்கான மாஸ்டர்பிளான் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர் அது கிடப்பில் போடப்பட்டதால், குடி யிருப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்களாக பெருகிவிட்டன. இதனால் குடியிருப்புகள் நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி போன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய தொழில் வளர்ச்சிக்கான நகர்ப்புற இடவசதி குறுகிவிட்டன.

இதற்கு தீர்வு காணும் வகையிலும், மதுரையின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக ‘மாஸ்டர் பிளான்’ திட்டம்  உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உசிலம்பட்டி, மேலுார், திருமங்கலம் நகராட்சிகள் உட்பட 4 டவுன் பஞ்சாயத்துகள், 316 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 147.97 சதுர கிலோ மீட்டருக்கான ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் நிறைவேற்றுவதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

‘மாஸ்டர் பிளான்’ திட்டம் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டால் மதுரை மாநகராட்சி மட்டுமின்றி அருகில் உள்ள சிறிய நகரங்கள், ஊர்கள் அனைத்தும் பெரும் முன்னேற்றம் அடையும். மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டு அனைத்து வசதிகளும் கிடைக்கும். வர்த்தக அளவில் தென் மாவட்டங்களிலிருந்து எளிதில் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.