சென்னை: வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதம் குறித்து ஆய்வு செய்ய உள்துறை இணைசெயலாளர் தலைமையில் நிதி அமைச்சக அதிகாரி உள்பட  7 பேர் கொண்ட மத்தியஅதிகாரிகள் குழு தமிழகம் வருகிறது. வரும் 21ந்தேதி சென்னை வரும் இந்த குழுவினர் சென்னை உள்பட பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வ மண்டலம் காரணமாக, பெய்த கனமழைக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. டெல்டா மாவட்ட பயிர்கள் மழையில் நனைந்து வீணானதுடன், குமரி மாவட்டம் கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.300 கோடி ஒதுக்கி, நிவாரணங்கள் வழங்க உததரவிட்டு உள்ளார். இதையடுத்து, மத்தியஅரசும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து,  தமிழக மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய  7 பேர் கொண்ட மத்திய குழு வரும் 21ந்தேதி தமிழகம் வருகிறது.

உள்துறை இணைசெயலாளர் ராஜீவ் சர்மா, தலைமையிலான இந்த குழுவில், நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கவுல்  வேளாண் அதிகாரி விஜய் ராஜ் மோகன் இடம்பெற்றுள்ளனர். மேலும், நீர்வளத்துறை அமைச்சக இயக்குனர் தங்கமணி, மின்துறையில் இருந்து பாவ்ய பாண்டே, சாலை போக்குவரத்து அமைச்சக்கத்தில் இருந்து அதிகாரி ரஞ்சய் சிங், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி எம்.வி.என். வர பிரசாத்  உள்பட 7 பேர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு சென்று வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்வதுடன், தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.