சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 759 பேர் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் இன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து மொத்த உயரிழப்பு 103 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு குணமடைந்து இன்று மேலும் 363 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 7491 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் 3லட்சத்து 97ஆயிரத்து 340 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 759 பேரில் 624 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மேலும் 49 பேர் வெளிமாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய மேலும் 24 பேர், ராஜஸ்தானிலிருந்து தமிழகம் திரும்பியவர்களில் 6 பேர், மேற்குவங்கத்திலிருந்து திரும்பிய 3 பேர் மற்றும் டெல்லி, தெலுங்கானா, உ.பி. மற்றும் ஆந்திராவிலிருந்து தலா ஒருவர் உள்பட வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 12 பேருக்கு இன்று கொரோனா உறுதி ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த 12 பேரில் லண்டனில் இருந்து வந்தவர்கள் 7 பேர், பிலிப்பைன்ஸ்-5 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.