களக்காடு:  என்னை நீக்க தமிழக காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் கிடையாது. நான் கட்சியின் பொருளாளர். என்னை தமிழக காங்கிரஸ் எப்படி சஸ்பெண்ட் செய்யும்? என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்து உள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற  ஆலோசனை கூட்டத்தின்போது, நெல்லை மாவட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தலைமையில் தர்ணா நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு கோஷ்டி மோதலில் ஏற்பட்டது. இந்த மோதலில்,  நெல்லை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளான ராபர்ட், ஜோஸ்வா, டேனியல் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வன்முறைக்கு ரஞ்சன் குமார்தான் காரணம் என ரூபி மனோகரன் தரப்பினர்  குற்றம்சாட்டினர்.

இதையடுத்து,  இந்த நிலையில் ரூபி மனோகரனை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இது தொடர்பாக,   ரூபி மனோகரன், ரஞ்சன்குமார் ஆகியோருக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியது. ஆனால், ரூபி மனோகரன் விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து,  ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  ரூபி மனோகரன், களக்காட்டில்  ஒரு லட்சம் பனை கன்றுகளை நடும் திட்டம் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால், வேறு நாள் ஆஜராக அவகாசம் கோரி ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி தலைவர் ராமசாமிக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனாலும் என்னிடம் விசாரணை ஏதும் நடத்தாமல் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.  எனக்கு இந்த சம்பவம் வருத்தமாகவே உள்ளது.

நான்  தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ளேன், சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன். என்னை இடைநீக்கம் செய்ய மாநில காங்கிரசுக்கு அதிகாரம் இல்லை. என்மீது, தமிழக காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்க முடியாது. இதை அகில இந்திய காங்கிரஸ் தலைமைதான் எடுக்க முடியும். எனவே என் மீதான நடவடிக்க தவறானது. நான் குற்றமற்றவர் இந்த விஷயத்தில், டெல்லி காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் தெரிவித்துள்ளார்.

ரூபி மனோகரன் இடைநீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன், தொகுதி பணிகளை ஏற்கெனவே ஒப்புக் கொண்டதற்காக ஒழுங்கு முறை கமிட்டியில் ஆஜராக நேரம் கேட்டிருந்தார். ஆனால் அவரிடம் விசாரணையே நடத்தாமல் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். விசாரணையே நடத்தாமல் ஒருவரை இடைநீக்கம் செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது, கட்சியின் பைலாவில் அப்படி ஏதும் உள்ளதா? இதுகுறித்து டெல்லி தலைமையிடம் முறையிடுவோம் என்றார்.