சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் சார்பாக முதல்வர் ஸ்டாலினிடம் தங்களது ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று வழங்கினர்.
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று தொழில் துறையினர், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். மேலும் எம்.பி., எம்எல்ஏக்களும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வபெருந்தகை, உள்பட சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக தங்களது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார்கள்.
ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், மே 19ந்தேதி மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின்போது சு.திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, ஜெயக்குமார், கோபண்ணா ஆகியோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.