சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவரை தேர்ந்தெடுப்பதில்  இழுபறி நீடித்து வருகிறது.. இன்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டதால் முடிவு எடுக்க முடியாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 18 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, கட்சியின் சட்டமன்ற தலைவர் யார் என்பதில் போட்டி எழுந்துள்ளது. இதையடுத்து,  சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக, உறுப்பினர்களின் கருத்து கேட்புக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் இன்று மீண்டும் நடைபெற்றது.

ஆனால், இன்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனால் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பையும் புறக்கணித்தார்.

முன்னதாக கடந்த 7ம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை தலைவர் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், பலர், போட்டியிட்டதால், முடிவு எட்டப்படாமல், இன்று மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. . இதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதிலும் சலசலப்பு எழுந்ததால், முடிவு எடுக்கமுடியாமல் இழுபறி நீடித்து வருகிறது.

சட்டப்பேரவைத் தலைவர் பதவி போட்டியில்,  குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதரணி, குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ் மட்டுமின்றி சோளிங்கர் தொகுதி எம்எல்ஏ முனிரத்னம், விசிகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்எல்ஏவாகி உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை ஆகியோர் உள்ளனர்