சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் தமிழக முதல்வர் எடப்பாடி உள்பட பல மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமருடனான ஆலோசனையை புறக்கணித்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

சீனாவின் கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலக நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது.  இந்தியாவில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முதல்கட்டமாக மார்ச் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  ஆனால் கொரோனா தாக்கம் குறையாத நிலையில், ஊரடங்கு மேலும் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இருந்தாலும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது.

சில மாநிலங்கள் சார்பாக நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை யும் எழுந்துள்ளது. அப்படி இல்லை என்றால், தங்கள் மாநிலங்களுக்குள் எந்தவித ரயில், விமான சேவையும் அனுமதிக்கக் கூடாது என்றும் மாநிலங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கேரளா உள்பட சில மாநிலங்கள் தங்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் இந்த காணொலி காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதேவேளையில், இன்றைய ஆலோசனைக் கூட்டத்தை பினராயி விஜயன் புறக்கணித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்தியஅரசு, கேரளாவுக்கு நிதி உதவி செய்யவில்லை, தொடர்ந்து மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று கேரளா குற்றம் சாட்டி வருகிறருது. இந்த   நிலையில் கேரளா முதல்வர் புறக்கணிப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.