சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேசியது என்ன? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள், அரசின் திட்டங்களின் பலன்கள் தொடர்பாக ஆளுநர் உரையில் இடம்பெறவுள்ள அம்சங்கள் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்பாகவும், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுதாவ தகவல் பரவின.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன என்பது குறித்து வெளியான தகவலில், இன்றைய கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. வருகிற 9ம் தேதி கூடுகிற சட்டப்பேரவை கூட்டம் 2023ம் ஆண்டின் முதல் பேரவை கூட்டம் ஆகும். அதனால் அன்றைய தினம் காலை 10 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். அதன்படி, கவர்னர் உரையில் தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய மசோதாக்கள் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் கவர்னர் உரையில் இடம்பெற உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.