டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் விசாரணையை  இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்யப்படும் என  நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.  அப்போது, நீதிபதிகள் குறுக்கிட்டு, ஒபிஎஸ், இபிஎஸ் என்பது என்ன  விளக்கம் கேட்டனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக யார் யார் இருந்தார்கள் என்ற விவரத்தை நீதிபதிகள் கேட்டறிந்து பதிவு செய்தனர்.

நீதிமன்ற விசாரணை காரணமாக கட்சிப் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக 2021, டிசமர்பரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு கூறப்பட்டது. மேலும், கட்சியின் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு அதன் விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என்றால் அனைத்து பதவிகளும் செல்லாது என ஒபிஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பும் முன்வைத்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை நாளை மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்தனர். மேலும், விசாரணையை இந்த வாரத்திற்குள் நிறைவு செய்ய விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.