சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் 13ந்தேதி முதல்வர் எடப்பாடி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதான் எடப்பாடி அரசின் கடைசி கேபினட் கூட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி தொடர்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர், தமிழக அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், சிறையில் இருந்து தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி வந்துள்ள சசிகலாவும், அரசியல் களேபரங்களை உருவாக்கி வருகிறார். இதனால், தமிழகத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுகவிலும் சலசலப்பு உருவாகி உள்ளது. பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் சசிகலாவுடன் தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில்,  தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு.
ஜெ.மறைவுக்கு பிறகு,  இபிஎஸ், ஓபிஎஸ் என்ற இரட்டை தலைமையில், அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற சலசலப்புக்கு மத்தியிலும், ஆட்சியை தொடர்ந்து சாதனை படைத்துள்ளது.  இந்த நிலையில், நாளை மறுதினம் அமைச்சரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டம்தான் எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியின் கடைசி கூட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், நிர்வாக பணிகளில், முதல்வரோ, அமைச்சர்களோ தலையிட முடியாது என்பதால், 13ந்தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் எதிர்கால திட்டங்கள் குறித்தும், வாக்குகளை கைப்பற்றும் வகையில், மக்களுக்கு ஏதாவது அதிரடி சலுகைகள் வழங்கலாமா என்பது குறித்தும்  விவாதிக்கப்பட இருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.