சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட் மற்றும் ரூ. 34,237 கோடி முதலீடு; 50,000 பேருக்கு வேலை; 15 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. பின்னர் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழகத்தில் ரூ.34,237 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 55,961 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். இதில் ‘அடிடாஸ்’ மற்றும் ‘டாடா ஜாகுவார்’ போன்ற முக்கிய நிறுவனங்களின் பிரம்மாண்ட முதலீடுகளும் அடங்கும்.
தொழில் வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்துடன் நின்றுவிடாமல், மாநிலம் முழுவதும் பரவ வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று கூறிய அமைச்சர், அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்கள் மட்டுமின்றி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்தத் தொழிற்சாலைகள் அமைய உள்ளன.
இந்த முதலீட்டுத் திட்டங்களில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன:
‘கேயன்ஸ் சர்க்கிட் லிமிடெட்’ (Kaynes Circuit Ltd) நிறுவனம், பிசிபி (PCB), கேமரா மாடியூல்ஸ், மற்றும் லேமினேட்ஸ் போன்ற மேம்பட்ட உற்பத்திப் பணிகளைத் தொடங்க உள்ளது.
‘ஜான்சன் எலக்ட்ரிக்’ (Johnson Electric) மற்றும் ‘யஸாகி இந்தியா’ (Yazaki India) ஆகிய நிறுவனங்கள் வாகன மின்னணு உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய உள்ளன.
‘எவர்வே கொத்தாரி ஃபுட்வேர்’ நிறுவனம் மூலம் உலகப்புகழ் பெற்ற ‘அடிடாஸ்’ பிராண்ட் உற்பத்தி தமிழ்நாட்டிற்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
‘ஜோனஸ்’ (Jonas) எனும் நிறுவனம் ஏரோஸ்பேஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் ரேடார் அமைப்புகள், ஏவுகணை பாகங்கள் மற்றும் ஆயுதத் தளவாடங்களை உற்பத்தி செய்யவுள்ளது.
தூத்துக்குடியில் ‘ஜெட்சால்’ (Zetshall) நிறுவனம் சோலார் செல்களை உற்பத்தி செய்ய உள்ளது.
நீலப் பொருளாதாரம் மற்றும் கடல்சார் முதலீடு
தமிழகத்தின் கடல்சார் பொருளாதாரத்தை (Blue Economy) மேம்படுத்தும் வகையில், சென்னை ‘ராதா இன்ஜினியரிங்’ நிறுவனம் கப்பல் கட்டும் துறையில் முக்கிய முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. இது மீனவ சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
டாடா – ஜாகுவார் லேண்ட் ரோவர்
வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி ராணிப்பேட்டையில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் இணைந்து, டாடா ஜாகுவார் லேண்ட் ரோவர் (Tata JLR) தொழிற்சாலையின் ‘ரோல் அவுட்’ (Roll out) நிகழ்வைத் தொடங்கி வைக்க உள்ளனர்.
வின்ஃபாஸ்ட் (Vinfast) மற்றும் டாடா ஜே.எல்.ஆர் என இரண்டு பெரிய கார் நிறுவனங்கள் ஒரே ஆட்சிக் காலத்தில் மிகக் குறுகிய காலத்தில் வருவது இதுவே முதல்முறை என்றும், இதுவே ‘திராவிட மாடல்’ அரசின் வேகம் என்றும் டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டார்.
மேலும், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி இதுவரை எந்த அரசாங்கமும் நடத்தாத வகையில் ‘கன்வெர்ஷன் கான்கிளேவ்’ (Conversion Conclave) நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தொழில் துறையில் ‘நம்பர் 1’ மாநிலம் என்பதை நிலைநாட்டும் வகையில் இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட உள்ளன”
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]