சென்னை: தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்னென்ன சேர்க்கலாம் என்பது குறித்து, துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கனவே  முக்கிய துறைகள், வணிகர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோரை நிதித் துறை அமைச்சர், செயலர் அழைத்து கருத்து கேட்டு இறுதி செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட  இருப்பதால்,   பட்ஜெட் தொடர்பாக 3 நாள்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் பிப்ரவரி 18ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல்  தொடங்கி நடைபெற்று வருகிறது.  தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் மற்றும் நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் உள்பட துறைவாரியாக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.  நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி மன்றங்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகள் சார்ந்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றன. நிதித் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று,. சமூக நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலன், கலை, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, வணிகவரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்று வருகிறது.  தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.