சென்னை; உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். உ.வே.சா.வின் செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும் என குறிப்பிட்டுள்ளது.
“தமிழ்த் தாத்தா” என்று அழைக்கப்படும். உவேசா பிறந்தநாள் இன்று.. உ.வே.சாமிநாதையர் தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு அருகிலுள்ள உத்தமதானபுரத்தில் 19.2.1855 இல் பிறந்தார்; தந்தை வேங்கட சுப்பையர்; தாய் சரசுவதி அம்மாள்; இயற்பெயர் வேங்கடநாதன். திருவாவடுதுறையில் ஆசிரியர் இட்ட பெயர் சாமிநாதன்.
தமிழ்ப் பணியைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டும் சிவபக்தியுடையவராகவும் இருந்த உ.வே.சா அவர்கள் பெற்ற பட்டங்களும் சிறப்புகளும் ஏராளம். 1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி “மகா மகோ பாத்யாயர்’ (பெரும் பேராசிரியர்) என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு “தமிழ் இலக்கிய அறிஞர்’ என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது. 1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து உ.வே.சா. உரை நிகழ்த்தினார். இந்த உரையை கேட்ட காந்தியடிகள், “இந்த பெரியவரின் அடிநிழலில் இருந்தவண்ணம் நான் தமிழ் கற்க வேண்டுமென்ற ஆர்வமிகுதிதான் என்னிடம் எழுகிறது’ என்றார். இம் மாநாட்டின் போது அனைவராலும் “தமிழ்த் தாத்தா’ என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் காந்தியடிகளைவிட பதினைந்து வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாளை தமிழிலக்கிய_மறுமலர்ச்சி_நாள் என தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.
இவ்வாறு போற்றப்படும் உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு, உ.வே.சா.வின் செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ” தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் – பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் பிறந்தநாள் இன்று!
மண்ணிலும் தீயிலும் மறைந்துபோகவிருந்த தமிழர் வரலாற்றுச் சுவடிகளைப் பதிப்பித்த அவரது செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும்! என குறிப்பிட்டுள்ளார்.