சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டுள்ள 125 வீரர்களுடன், தமிழக வீராங்கனைகளுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், நாகநாதன் பாண்டியனும் கலப்பு ஓட்டத்தில் தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். திருச்சியை சேர்ந்த தனலட்சுமி, பயிற்சி செலவுகளை கூட சமாளிக்க முடியாத நிலையிலும் அயராது உழைத்து ஒலிம்பிக்கிற்கு சென்றுள்ளார். அதே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபா வெங்கடேசனும் மிகுந்த வறுமையிலும் ஒலிம்பிக்கில் கால் பதித்துள்ளார்.
இவர்களில், சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக தமிழ்நாடு விளையாட்டுத்துறைஅமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், மிகுந்த வறுமையிலும் போராடி ஒலிம்பிக் வரை சென்றுள்ள சுபா வெங்கடேசன் மற்றும் தனலட்சுமி இருவரும் தாயகம் திரும்பிய உடன் அவர்களுக்கான அரசு பணிக்கான ஆணை வழங்கப்படும். மேலும், தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டு, சர்வதேச அளவில் தமிழக வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.