சென்னை: மோடி அரசு கொண்டு வந்துள்ள  3 வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு அதிமுக பாஜக கூட்டணி கட்சியான பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தனி  தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில், மத்தியஅரசின் வேளாண் 3 வேளாண் சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை. மத்திய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டு வந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவே, 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்றும், வசாயிகளின் வாழ்வுசெழிக்க 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

தீர்மானத்தின்மீது பேசிய   எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.  வேளாண் சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம்; பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமை யாக இருந்து தீர்மானத்தை கொண்டு வரலாம் என கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன். வேளாண் சட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து குழந்தைக்கு கூட தெரியும்; ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என கேள்வி விடுத்தார்.

தீர்மானத்தை ஆதரித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை,  போராடும் விவசாயிகளுக்கு நான் இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தும் வகையில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார், அதை காங்கிரஸ் ஆதரிக்கிறது என கூறினார்.

தீர்மானத்தின் மீது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவரும், பண்ருட்டி எம்.எல்.ஏ.வுமான  வேல்முருகன் பேசும்போது, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் வேளாண் சட்டங்கள் உள்ளன; விவசாயிகளின் வேதனையை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தருகிறோம் என கூறினார்.

பா.ம.க. சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, அதை மத்தியஅரசு போக்க வேண்டும் என கூறினார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கே.பி.அன்பழகன் பேசும் போது, இந்த விவகாரத்தில்  அவசர அவசரமாக தனித் தீர்மானம் கொண்டு வராமல், அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து மத்திய அரசிடம் வலியுறுத்தலாம்; அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும் என கூறினார்.

இதையடுத்து, தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏக்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக  ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்திஸ்கர், டெல்லி, மேற்குவங்கத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு இன்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.