சென்னை: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடிய விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என   சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின்  தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மத்தியஅரசின் மூன்று சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்று குறிப்பிட்டார்.

தீர்மானத்தின்மீது பேசிய  அதிமுக, பாஜக கட்சியினர், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த தீர்மானத்தின் மீது பேசிய திமுக கூட்டணி கட்சிகளின்  எம்எல்ஏக்கள் வேல்முருகன், ஜவாஹிருல்லா போன்றோர் தீர்மானத்தை ஆதரித்ததுடன், விவசாய சட்டங்களை எதிர்த்து போராடியவரகளின் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்து,   தமிழ்நாட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களின் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என அறிவித்தார்.