சென்னை: தமிழகசட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமை கட்சியின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. கடந்த மக்களவை தேர்தலின்போதும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த தேர்தலிலும் பானை சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது.. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கி 19ந்தேதி முடிவடைந்தது. இன்று (22ந்தேதி) வேட்புமனுக்கள் வாபஸ் முடிவடைந்ததும், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில்வ திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தனிச்சின்னம் ஏதும் இல்லாததால், இந்த தொகுதியில், பானைச்சின்னம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் திருப்போரூர் தொகுதியில் பாமகவுடனும், பிற 5 தொகுதிகளில் அதிமுக உடனும் நேருக்கு நேராக களம் காண்கிறது.
தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.