சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

மிழக தேர்தல் வாக்கு பதிவு முடிந்து, நீண்ட காத்திருப்புக்கு பிறகு மே மாதம் 6 -ம் தேதி வாக்குகள் எண்ண தொடங்கி முடிவுகள் வெளிவர தொடங்கிய நேரம் தொட்டே, திமுக தரப்பில் உற்சாகம் குறைந்தே காணப்பட்டது. 200 -கும் அதிகமான தொகுதிகள் வெல்லும் என்று எதிர் பார்ப்புடன் காணொளி கண்டுகொண்டிருந்த திமுகவினர் பலர் ஏமாற்றம் அடைந்தனர். அன்றைய பிற்பகுதியில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்குமா என்ற இழுபறி வரை சென்றது. திமுக வென்ற சில தொகுதிகளில் தமக்கு அடுத்து வந்த அதிமுகவைவிட சொற்ப வாக்குகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றனர். அதே போல், சில தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவினர்.
ஒரு வழியாக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை திமுக வென்றதுடன் அதன் கூட்டணி 159 இடங்களில் வென்று, பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியை பிடித்தது.

திமுக தலைமைக்கும், தொண்டருக்கும் அது மகிழ்ச்சியை தந்தாலும், அவர்கள் எதிர் பார்த்த 200 தொகுதிகளை வெல்ல முடியவில்லை என்பது சோர்வையே தந்தது.
திமுகவிற்கான பிரதான சரிவு அல்லது தோல்வி என்பது கொங்கு மண்டலத்தில் தான் என்பது ஆச்சர்யமாக இருந்தது. பொள்ளாச்சி பாலியல் குற்றத்தின் பின்னணியில் அதிமுக சிக்குண்டு கிடக்கையில் திமுக மிக இலகுவாக வெல்லும் என்று கணக்கிட்டிருந்தார்கள். களநிலவரம் வேறாக மாறியதை யாரும் கவனிக்க தவறி விட்டார்கள்.

கொங்கு மண்டலத்தில் திமுகவின் பிரதான பிரச்சாரம் பொள்ளாச்சி பாலியல் குற்றம் மற்றும் அதிமுகவின் ஊழலே மையமாக இருந்தந்து. பொள்ளாச்சி பாலியல் குற்றத்திற்கான தேர்தல் தீர்ப்பை கடந்த பாராளுமன்ற தேர்தலில் கொங்கு மக்கள் அழித்துவிட்டார்கள், அதே கருவை மையமாக வைத்து மீண்டுமொருமுறை திமுக முன்னெடுத்த தேர்தல் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. ஊழல் குற்றச்சாட்டு குறித்தான பிரச்சாரம் தமிழகம் முழுக்கவே எங்கும் மக்களிடம் எடுபட்டதாக தெரியவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கலுக்கு அளித்த குடும்ப அட்டைதாரர்களுக்கான பரிசு தொகையானது வெகுவாக பெண் வாக்காளர்களிடம் அதிமுகவின் மீதான நன்மதிப்பை பெற்றுத்தந்தது. அதன் தாக்கம் தமிழகம் முழக்க பெண் வாக்காளரிடம் இருந்தது. அது, கொங்கு மண்டலத்தில் கொஞ்சம் அதிகமாக வேலை செய்தது. மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கான விலையில்லா WASHING MACHINE தமிழகம் முழுக்க அடித்தட்டு பெண்களிடம் ஒரு தாக்கத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

இந்த தேர்தலில், எடப்பாடியியரின் பிரச்சாரம் எங்குமே அதிரடியாக இல்லை, மாறாக பரிதாபம் பெரும் வகையிலாக வடிவமைத்திருந்தார்கள். பல சிக்கல்களுக்கு மத்தியில் முதல்வர் வேட்பாளராக தேர்வானது, தனியாளாக பிரச்சாரம் மேற்கொண்டது போன்ற நிகழ்வுகள் அவர்பால் ஒரு அனுதாபத்தை வாக்காளர் மத்தியில் ஏற்படுத்தியிருந்ததை திமுகவின் பிரச்சார குழுவினர் கணிக்க தவறிவிட்டார்கள். அந்த அனுதாபம், அவருடைய சமூகத்தினரிடம் கொஞ்சம் அதிகமாக வாக்குகளை பெற்று தந்தது.

தேர்தலின் இறுதி நாட்களில் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஆ. ராசா அவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சை திரித்து, அதிமுகவினர் கொங்கு தாய்மார்களிடம் கொண்டு சேர்த்தார்கள். தேர்தல் ஆணையத்தின் ஆ. ராசாவின் பரப்புரைக்கான தடை அந்த குற்றச்சாட்டிற்கு மேலும் வலு சேர்த்தது. அதன் தாக்கம், கொங்கு மண்டல பெண் வாக்காளர்களிடம் கொஞ்சம் அதிகமாக தென்பட்டது.

தேர்தல் பரப்புரை முடியும் காலக்கெடுவின் கடைசி தினத்தில், பெரும்பான்மையான பிரபல செய்தித்தாள்களில் வந்த செய்தி போன்ற அதிமுகவின் விளம்பரங்கள், நடுநிலை வாக்காளர் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தாக்கம், தமிழகம் முழுக்கவே இருந்தது. திமுகவின் வாக்குகள் தமிழகம் முழுக்க சற்று சரிந்ததில் இந்த விளம்பரமும் பெரும்பங்காற்றியது.

திமுக எதிர்பார்த்ததை போல, தினகரனின் அமமுக குறிப்பிட்ட சில மாவட்டங்களை தவிர, தமிழகம் முழுக்கு அதிமுகவின் வாக்குகளை பெரிதாக பிரிக்கவில்லை. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் அதன் தாக்கம் முற்றிலுமாக இல்லை. அதிமுகவினர், கடைசி நேரத்தில் அமமுகவினரை சரிகட்டிவிட்டார்கள். மேலும், தினகரனும் போதிய செலவினை தேர்தலில் செய்யவில்லை. இந்த தேர்தல் வியூகத்தை திமுகவினர் கணிக்க தவறிவிட்டார்கள்.

திமுகவிற்கான கூட்டணியில் கொங்கு மண்டலத்தில் வலு சேர்க்கும்படியான கூட்டணி கட்சியினர் யாரும் இல்லை. மாறாக, அதிமுகவிற்கு பாஜகவின் கூட்டணி பலம் சேர்த்தது. பாஜகவின் பிரச்சாரம் அவர்களுக்கு வாக்கு சேர்த்ததோஇல்லையோ, அவர்கள் தயார் செய்த வாக்காளர்கள் அதிமுகவிற்கு இலகுவாக வாக்களித்தார்கள். இதே, பாராளுமன்ற தேர்தலாக இருந்தால், அவர்கள் நிச்சயமாக பாஜக எதிர் நிலையெடுத்து அதிமுகவிற்கு வாக்களித்திருக்கமாட்டார்கள்.

திமுக S .P . வேலுமணிக்கு எதிராக வெளியில் இருந்து வேட்பாளரை களம் இறக்கியது, திமுகவிற்கு எதிராகவே முடிந்தது. திமுக, கொங்கு மண்டலத்தில் அதற்குரிய வட்டார தலைவர்களை உருவாக்கவேண்டும். அவர்களை முன்னிறுத்தி களம் கண்டிருக்க வேண்டும். மேலும், பத்து ஆண்டுகளில் திமுகவின் பல கொங்கு மண்டல உயர் தலைவர்கள் அதிமுகவினருடன் கைகோர்த்துவிட்டனர். தற்போது, திமுகவினர் இளம் தலைமையை உருவாக்கவேண்டும்.

சேலம் மாவட்டம் முதல்வர் மாவட்டம் என்பதாலும், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியாலும், மண்ணின் மைந்தர் என்பதனால் அதிமுகவினரே எதிர்பார்க்காத வெற்றியை அங்கு பெற்றனர். அதிமுக பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியால், பாட்டாளி மக்கள் கட்சி பயனடைந்ததைவிட அதிமுகவினர் அதிகமாக கொங்குமண்டலத்தில் பயனடைந்தனர்.
இவையனைத்திலும் மேலாக, தேர்தல் பரப்புரையில் அதிகமாக பணம் புழங்கிய பகுதி கொங்கு மண்டலம் தான். எடப்பாடி மற்றும் SP .வேலுமணி ஆகியோருக்கு இது ஒரு வாழ்வா சாவா என்ற போராட்ட களமாக திமுக மாற்றியதின் எதிர் விளைவாக அதிமுக வாக்கு ஒருமுகப்பட்டு பெரும் பொருள் செல்வலில் வெற்றியை ஈட்டித்தந்தது.

திமுக இத்தேர்தலில் கொங்கு மண்டலத்தில் கற்ற பாடம் மிக முக்கியமானது. இந்த பாடமும், இதை கையாளப்போகும் விதமும் திமுகவை தமிழகம்முழுக்க தேர்தல் பரப்புரைப்பணியில் ஒரு புது பரிமாணத்தை பெற செய்யும்.

தோல்விகளை பாடமாக ஏற்பவர்கள் வெற்றியை வசப்படுத்துவர்.