கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கோவை வருகிறார். ராகுலுக்காக சிறப்பான வரவேற்பு அளிக்கும் வகையில் மாவட்ட காங்கிரஸ் அனைத்துவித ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அதே வேளையில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது
தமிழகத்தில் ராகுல்காந்தி இன்றுமுதல் தனது தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். ராகுலின் தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு “ராகுலின் தமிழ் வணக்கம்” என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கடள தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அங்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இன்று காலை 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் ராகுல் காந்தி, நண்பகல் 11 மணி அளவில் கோவை வந்தடைகிறார். பின்னர் சிறு, குறு தொழில்முனைவோருடன் சுகுணா அரங்கில் மதிய உணவுடன் கலந்துரையாடுகிறார்.
கோவையில் முதற்கட்ட நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மாலை 3.30 மணிக்கு அவினாசி வருகிறார். அங்கு புதிய பஸ் நிலையத்தில் ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு அவர் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதையடுத்து மாலை 4.10 மணிக்கு அனுப்பர்பாளையம் வரும் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கும் ராகுல்காந்தி பிரசாரம் செய்கிறார்.
இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் முன்புறம் உள்ள குமரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பிரசாரம் மேற்கொள்கிறார்.
மாலை 5.45 மணிக்கு திருப்பூர்-பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
இரவு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
ராகுல் கோவை வருகையையொட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவை மேற்கு மண்டலத்தில் ராகுல்காந்தி 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளதாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.