தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின.
80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பளிக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது பல்வேறு குளறுபடிகளுக்கு வழிவகுக்கும் என்று இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பணநடமாட்டத்தை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்த வேண்டும் என்று தே.மு.தி.க. கோரிக்கை வைத்துள்ளது.
தேர்தல் முடிவுகளை நீண்டநாள் தள்ளிப்போடாமல் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
அதேபோல், பா.ஜ.க. சார்பில் தேர்தலை ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு பின் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே மாதத்தோடு தற்போதைய அரசின் ஆட்சிகாலம் முடிவதால் அதற்கு முன் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.
இம்மாதம், 14ம் தேதி பிரதமர் தமிழகம் வர இருக்கும் நிலையில் அவரது வருகைக்கு பிறகு தேர்தல் வேலைகள் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் மே மாதம் கோடை வெயில் உச்சமாக இருக்கும் என்பதால் அதற்கு முன்பே தேர்தலை நடத்த இந்த கூட்டத்தில் வலியுறுத்தி வருகின்றன.
அரசியல் கட்சிகளின் இந்த கோரிக்கைகளை வைத்து பார்க்கும் போது ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழ் புத்தாண்டுக்கு முன்பே தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் பயின்ற பத்தாம் வகுப்பு மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது, இதனால் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.