கடலூர்:

மிழகத்தில் தமிழ் அவமதிக்கப்பட்டு வருவதால், மீண்டும் மொழிப்போருக்கான சூழல் உருவாகி வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸடாலின்  மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளை திமுக கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் ஆங்கே பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர்  பேசியதாவது, மொழிக்கான வீ வணக்க நாள் கொண்டாடும் வேளையில்தான்  தமிழகத்தில் தாய் மொழிக்கு அவமரியாதை நடந்துள்ளது.  அதற்கு வருத்தம் தெரிவிக்காவிடில் திமுக போராடும் என்றார்.

தமிழகத்தில் ஆன்மிக அரசியல் எடுபடாது என்ற அவர், இது பெரியார், அண்ணா, கருணாநிதியால் பண்படுத்தப்பட்ட மண் என்று கூறினார்.

தமிழுக்காக திமுக 5 கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளது. இந்த போராட்டம் 1938ம் ஆண்டு முதலே நடைபெற்று வருகிறது என்ற அவர், இன்னும்   இந்தப் பிரச்னை நீருபூத்த நெருப்பாகவே உள்ளது என்றார்.

மத்தியில் ஆளும்  பாஜக அரசு தமிழகத்தில் தமிழுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. தமிழர் பண்டிகைக்கு பிரதமர் தமிழில் வாழ்த்து தெரிவித்தாலும், வங்கிகள், நெடுஞ்சாலைகள், மத்திய அரசுப் பணிகள், கல்வியில் இந்தி, சமஸ்கிருத திணிப்பை மேற்கொள்கிறது என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின்,

புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்துக்கு முடிசூட்டும் முயற்சி நடைபெற்று வருகிறது… அதன் காரணமாகவே, சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம், ஆசிரியர் தினத்தை குருஉத்சவ் என்று பெயர் மாற்றம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்றார்.

மேலும், இந்த நிலை நீடித்தால்,  1965-ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற   மொழிப்போர் நடைபெற்ற களம் மீண்டும் உருவாகும் நிலை ஏற்படும் என்றும், மொழி, இனம், கலாசாரம் காக்க திமுக மீண்டும் போராடும் என்றார்.

பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதைக் குறைக்க வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனாலும், இதுவரை அதற்கு எந்தவித பதிலும் இல்லை. எனவே,  வரும் 27-ம் தேதி தோழமைக் கட்சிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றும், அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் 29-ம் தேதி முதல் விரும்பும் இடங்களில் சாலை மறியல் நடத்தி சிறை நிரப்பும் போராட்டத்தை தொடர்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.