மீனவர்களுக்கு எதிராக இலங்கை அடாவடி சட்டம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Must read

சென்னை,

பாக். ஜலசந்தி  பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும்  வகையில், அந்த இடத்தில் மீன் பிடித்தால், கைது செய்யப்படும் மீனவர்களிடம் இருந்து  ரூ.50 லட்சம் முதல் ரூ.7.24 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டதிருத்தம் ஒன்றை இலங்கை அரசு  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.

இதற்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், இலங்கை அரசின் இந்த அடாவடி சட்டம் குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு ஜனவரி 24-இல் கொண்டு வந்துள்ள கடுமையான புதிய சட்டமசோதா குறித்தும், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்தும் தங்கள் கவனத்துக்கு மிகவும் கவலையுடன் கொண்டு வருகிறேன்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் ஜனவரி 25-ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டு, அனைவரும் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசின் மீன் வளம் மற்றும் நீர் வளத்துறை சட்டத்தில் 2017-இல் தடைசெய்யப்பட்ட மீன்வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பது குற்றம் எனச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது அந்நிய மீன்பிடி கப்பல் என்ற பெயரில் புதிய மசோதா ஒன்று கடந்த 24-ம் தேதியன்று இலங்கை அரசு அறிமுகம் செய்துள்ளது.

கைது செய்யப்படும் மீனவர்களை நீண்ட காலம் சிறையில் வைப்பதற்கும், அதிக அளவில் அபராதத் தொகை வசூலிக்கும் வகையிலும் இந்த சட்டத் திருத்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.

அதாவது, சில கோடிகளில் அபராத தொகை வசூலிக்கும் வகையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் அவர்களுடைய பாரம்பரியமான கடல்பகுதியிலேயே மீன் பிடித்து வருகின்றனர். எனினும், இப்போதைய இலங்கை அரசின் புதிய மசோதா தமிழக மீனவர்கள் மத்தியில் குறிப்பாக பாக். நீரிணைப் பகுதி மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையுடன் பேச்சுவார்த்தை: மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா-இலங்கை அமைச்சர்கள் இடையே இரு முறையும், இரு நாட்டு மீனவர்களின் குழுக்களுக்கு இடையே மூன்று முறையும் பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு எதுவும் எட்டப்படாமல் அப்படியே உள்ளது.

இதற்கிடையே, பாக்., நீரிணை பகுதி மீனவர்களின் மீன்பிடி திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக தமிழக மீனவர்களுக்கு எதிரான நிலையை எடுத்துள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தம்: பாக். நீரிணைப் பகுதி தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியாகும். தமிழக மீனவர்களின் நலன் குறித்து அக்கறை கொள்ளாமல் கச்சத்தீவை 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு இந்தியா அளித்தது.

இதற்குத் தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடுத்த வழக்கு நிலுவையில் இருக்கிறது என்பதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

108 மீனவர்கள் விடுதலை: எனவே, இப்போது கைது செய்யப்பட்டுள்ள 8 மீனவர்களுடன் இலங்கைச் சிறையில் மொத்தம் 108 மீனவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப்படகுகளுடன் மொத்தம் 165 மீன்பிடி படகுகள் இலங்கையின் வசம் உள்ளன. இவற்றை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழக மீனவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இலங்கை அரசுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

அந்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என்ற உறுதியையும் இலங்கையிடம் இருந்து இந்தியா பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article