டெல்லி: கொரோனா தடுப்பூசி முன்பதிவிற்கான ‘கோவின்’ இணையதளத்தில் தமிழ் மொழி”புறக்கணிக்கப்பட்டு இருப்பது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்தியஅரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து, இன்னும் ஒருசில நாட்களில் தமிழ் மொழி இடம்பெறும் என மத்தியஅரசு பதில் தெரிவித்து உள்ளது.
கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில், முதலில் ஆங்கிலம் மற்றும் இந்திய இடம்பெற்றிருந்தது. பின்னர் கடந்த வாரம் மேலும் 9 மொழிகள் இடம்பெற்றன. இதில் தமிழ் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன் உள்பட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. கோவின் தளத்தில் தமிழ் இடம் பெறாதது ஏமாற்றம் தருவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தமிழ் உடனே இடம் பெற வழி செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். கோவின் தளத்தில் தமிழையும் சேர்க்கு மாறு தமிழக அரசுத் தரப்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், ”அடுத்த இரண்டு நாட்களில் தமிழ் மொழியும் இடம்பெறும்” என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவின் தளத்தில் மேலும் பல மொழிகள் சேர்க்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஓரிரு நாட்களில் தமிழ் மொழியும் சேர்க்கப்படும் என்றும் ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ் வழியில் கோவின் தளம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் சில தினங்களில் இது பயன்பாட்டுக்கு வரும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.