டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து திமுக எம்.பி. ராஜேஷ்குமாரும், எம்எஸ்.சுப்புலட்சுமி குறித்து  டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி ஐஎன்டிஐஏ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர். இதற்கிடையில், அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,  மக்களவையில், கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதா?’’ என்றுகேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்தியஅமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த பதிலில், ““பீம் சென் ஜோஷியின் வாழ்க்கை வரலாற்று நூல் அரசால் வெளியிடப்படவில்லை. ஆனால், மாபெரும் சாதனைகள் படைத்த கலைஞர்கள் பற்றிய சிறிய நூல்களை வெளியிடும் திட்டம் ஒன்றை ஒன்றிய அரசு தீட்டியுள்ளது. அதன் தொடக்கமாக, சங்கீத நாடக அகாடெமியால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பல்துறை கலை விற்பன்னர்களின் சுயசரிதை மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் வெளியிடப்படும்’’ என தெரிவித்தார்.

அதுபோல திமுக மாநிலங்களவை  எம்.பி. ராஜேஷ்குமார், பொதுத்துறை வங்கிகளில் பிராந்திய மொழி தகவல்தொடர்புகளில் வாடிக்கையாளர்களுக்கு எதிராக வங்கி அதிகாரிகள் செயல்பாடு உள்ளதா? தமிழ் உள்ளிட்ட மாநில மொழி தெரிந்தவர்கள் அந்தந்த மாநிலங்களில் நியமிக்கப்படுவதை கட்டாயமாக்க ஒன்றிய அரசு எடுத்த பரிசீலித்து வருகிறதா? இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய மத்திய இணை அமைச்சர் பகவத் கரத், “பொதுத்துறை வங்கிகள் வாரியத்தால் இயக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் அவை எழுத்தர்களுக்கான தேர்வை வங்கி மற்றும் பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் நடத்துகின்றன. ஆங்கிலம் இந்தி தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார். அவர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வங்கி அதிகாரிகள் பிராந்திய மொழிகளை கற்றுக்கொள்வதற்காக மொழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.