தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் என்பது ஹரிதாஸ் தொடங்கி கர்ணன், தளபதி என்று பட்டியல் நீடுகொண்டே போகும்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நான்கைந்து நாட்களுக்கு விடுமுறை என்பதால் பொங்கல் ரிலீஸ் படங்கள் நன்றாக கல்லாகட்டி வந்தன.

பொங்கலுக்கு ரிலீசாகும் படங்களின் வரவேற்பை பொறுத்து அந்த ஆண்டு வெளியாகும் படங்களின் கதைகளில் மாற்றமும் செய்யப்படும்.

 

ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக காத்திருந்த படங்கள் பலவும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தல பொங்கலுக்கு தியேட்டர் பக்கம் போக காத்திருந்த புதுமண தம்பதிகள் கூட வலிமை போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகாததால் வீட்டிலேயே முனகிக்கொண்டு உட்கார்ந்திருந்தனர்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு படங்கள் எதுவும் வெளியாகாததால் தியேட்டர் அதிபர்கள், விநியோகிஸ்தர்கள் என்று சகல தரப்பிற்கும் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான, மாஸ்டர் மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் வசூலை வைத்து பார்க்கும் போது வலிமை மற்றும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தால் இந்த இரண்டு படங்களின் டிக்கெட் வசூல் மட்டுமே சுமார் 350 கோடி ரூபாய் இருந்திருக்கும்.

இது தவிர டிக்கெட் வசூலுக்கு இணையாக விற்பனையாகும் குளிர்பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் வாகன நிறுத்த கட்டணம் என்று மொத்தத்தில் 500 முதல் 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பை திரைப்பட துறையை நம்பி இருப்பவர்கள் சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது.