துரை

மாநில மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்று மொழி ஆக்க முடியாது என மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு பொது நல வழக்கு மனுவைத் தாக்கல் செய்தர்.  அந்த மனுவில், “தற்போது தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன.  இவற்றில் இந்தி பயிற்று மொழியாக உள்ளது.  இந்தி பேசாத தமிழகத்தில் செயல்படும் பள்ளிகளில் இந்தி பயிற்று மொழியாக உள்ளது அநீதி ஆகும்.

எனவே தமிழகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழைக் கட்டாய பாடமாக்கவும் பயிற்று மொழி ஆக்கவும் உத்தரவிட வேண்டும்.   இந்த உத்தரவின் மூலம் மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழியைக் கட்டாயப் பாடமாக்கவும் பயிற்று மொழியாக்கவும் வகி செய்ய வேண்டும்” எனக் கோரப்பட்டது.

நேற்று இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.   இந்த மனுவுக்கு மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி, “இங்கு தமிழ் விருப்ப பாடமாக உள்ளதால் அதை விரும்புவோர் தேர்வு செய்து படிக்கலாம்.   மத்திய அரசின் பணியிலுள்ள ஊழியர்கள்  எங்கு பணி மாறுதல் பெற்றாலும், அவர்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காகவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்படுகிறது. இவை நாடு முழுவதும் செயல்படுவதால், அந்தந்த மாநில மொழிகளைப் பயிற்று மொழியாக்க முடியாது’’ என்றார்.

இதையொட்டி நீதிபதிகள், “நாட்டில் பல்வேறு வகையான பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில், நமக்குத் தேவையான பள்ளியை நாம் தேர்வு செய்யலாம்.  அதற்கு மாறாக, நாம் விரும்பும் கல்வி முறையை, சம்பந்தப்பட்ட பள்ளி தர வேண்டுமென நினைக்கக்கூடாது.  மத்திய அரசு பணியாளரின் குழந்தைகள் நலனுக்காக, ஒரே மாதிரியான கல்வியை வழங்குவதற்காகத்தான் இந்த பள்ளிகள் செயல்படுகின்றன” எனத் தெரிவித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.