பெங்களூர்,

பெங்களூரில் ஆடித்திருவிழாவையொட்டி தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட வெறியர்கள் கிழித்து எறிந்தனர். இது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் சமீப காலமாக இந்திக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. சமீபத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரெயில்சேவையின்போது, ரெயில்வே ஸ்டேஷனில் இந்தியில் ஊர் பெயர் வைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கர்நாடகாவில் பணிபுரியும்  மற்ற மாநிலத்திவர்கள் 6 மாதத்திற்குள் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு சுற்றறிக்கை அறிவித்தது.

அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் வேற்றுமொழி ஆக்கிரமிப்பை, பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூர் அருகே புலிகேசி நகரில் ஆடி மாத திருவிழாவுக்காக தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனரை கன்னட அமைப்பினர் கிழித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆடிக்கிருத்திகைக்காக அந்த பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள், வைத்துள்ள பேனரை  கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் கிழித்து எறிந்தனர்.

பேனரில் தமிழ் எழுத்துக்களையும், தமிழர்களின் படத்தையும் வெட்டி எடுத்தனர்.

கன்னட அமைப்பினரின் இந்த வெறிச்செயல் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

கன்னட அமைப்பின் இந்த செயலுக்கு கர்நாடக தமிழ்ச்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.