டில்லி,

ஜனாதிபதியை சந்தித்துவிட்டு நிருபர்களிடம் பேசிய அதிமுக எம்.பி.யும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை மத்திய அரசை காய்ச்சி எடுத்தார். மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார். ஜல்லிக்கட்டு குறித்து பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக எம்பிக்கள் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், இதுவரை பிரதமர் அவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை. இதன் காரணமாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு கொடுத்தனர்.

தொடர்ந்து இன்று காலை ஜனாதிபதியை ராஷ்டிரபதி பவன் சென்று சந்தித்தனர். பின்னர் வெளியே வந்த அதிமுக எம்.பிக்கள் குழு தலைவர் தம்பிதுரை டில்லியில் நிருபர்களிம் கூறியதாவது, அதிமுக கட்சியினர், அண்ணா வழிகாட்டுதலில் உறுதியாக உள்ளோம். தமிழ் மொழி பாதுகாப்பு, தமிழ் மொழி உணர்வு, தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும் போன்ற கொள்கைகளை எங்களுக்கு கற்று தந்தவர் அண்ணா. ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக ஜெயலலிதா ஒவ்வொருமுறையும் மத்திய அரசை அணுகினார். அவசர சட்டம் கொண்டுவர கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையில், இன்று அவரது அரசு வெற்றி பெற்றுள்ளது ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை மத்திய அரசே சட்டத்தை கொண்டு வந்திருக்கலாம். எனவேதான் நாங்கள் காத்திருந்தோம்.

ஆனால், பாஜக அரசும் உடனடியாக தீர்வு காண ஒத்துழைக்கவில்லை. எனவே தமிழக அரசே நேரடியாக தலையிட்டு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தியாவில் கூட்டாட்சி தத்துவத்தில் அனைத்து மாநில உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல் அனைத்து பிராந்திய மக்களின் கலாசாரம் காக்கப்பட வேண்டும் என்பதே கூட்டாட்சி தத்துவம். மத்திய அரசு, மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதினாலும், பாரம்பரிய கலாச்சாரங்களை பாதுகாக்க தவறினால் என்ன நடக்கும் என்பதற்கு தற்போதைய தமிழகமே சாட்சி.

தமிழர்களை, தமிழர் கலாசாரத்தை காக்க மக்கள் வீதிகளில் ஒன்று கூடியுள்ளார்கள். மத்திய அரசு இதை புரிந்து கொண்டு தீர்வு காண வேண்டும் என்று காட்டமாக கூறினார். மேலும், ஒவ்வொரு மாநில கலாச்சாரமும் வேறு வேறானவை. ஆனால் இந்தியா ஒன்றுதான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம், அந்தந்த மாநில கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும். ஒரு வரி, ஒரே தேசம் என்று மத்திய அரசு சொல்கிறது அது ஜிஎஸ்டிக்கு ஓ.கே. ஆனால், இந்தியாவில் தமிழகம் இருந்தாலும் ஒரே கலாசாரம், ஒரே மொழியை புகுத்தினால் நிலைமை விபரீதமாகிவிடும் என்பதை தமிழகம் இப்போது காட்டியுள்ளது. இதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தம்பித்துரை கூறினார்.